நாராயணன் கிருஷ்ணனுக்கு வயது 29. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் நிர்வாகப் படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட்!
பிரபல தாஜ் ஹோட்டலின் பெங்களூர் கிளையில் தலைமை சமையல் கலைஞராக பணியிலிருந்தவரின் திறமை புரிந்து அவரை தங்களின் ஸ்விட்ஸர்லாந்துக் கிளையில் பணியாற்ற தேர்வு செய்திருந்தனர்.
இன்னும் ஒருவாரத்தில் கிளம்ப வேண்டும். பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் விடைபெற்றுக் கொள்வதற்காக மதுரைக்குச் சென்றார்.
அங்கே, மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்காக ஒருநாள் காலையில் தாய், தந்தை, சகோதரியுடன் காரில் புறப்பட்டார். மேம்பாலம் அருகே கார் செல்லும்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர வைத்தது என்பது மிகச் சாதாரண வார்த்தை!
பாலத்தின் அடியில் ஒரு முதியவர், தனது மலத்தைத் தானே எடுத்து வாயில் வைப்பதைப் பார்த்தார். பசியின் கொடுமை!
பதறிப் போய் நடுச் சாலையில் அப்படியே காரை நிறுத்தியவர், அருகில் இருந்த கடைக்கு ஓடிச் சென்று இட்லி வாங்கி அவரிடம் கொடுத்தார். ஒரு நிமிடத்திற்குள் அத்தனை இட்லியையும் விழுங்கிவிட்டு நிமிர்ந்த முதியவரின் கண்களில் கண்ணீர். தனது கையை வேஷ்டி நுனியில் துடைத்துக் கொண்டு, வானத்தை அண்ணாந்து பார்த்தார். ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நன்றி என்றும் சொல்லவில்லை. சொல்லவும் தெரியாது. காரணம், அவர் ஒரு மனநோயாளி!
அவர் ஒரு மனநோயாளி என்றறிந்ததும் அந்த இளைஞருக்கு ஒரே அதிர்ச்சி. குடும்பத்தினருடன் ஆலயத்திற்குச் சென்று மீனாட்சியை வழிபட்ட போதும் அவரது மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அந்தப் பெரியவரையே சுற்றிச் சுற்றி வந்தது. மதியம் தனக்கான தயிர் சாதத்தைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு போய் அவருக்குக் கொடுத்தார். பெரியவர் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் அதையும் வாங்கி உண்டார்.
இந்தப் பெரியவரின் பரிதாப நிலை அவரை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், “அந்தக் காட்சியைப் பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனது சொந்த சகோதரர் ஒருவர் இப்படிப்பட்ட அவலமான நிலையில் இருக்கும்போது வெளிநாட்டு வேலை எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன். இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தேன்.

பின்னர் இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதற்காக 2003ம் ஆண்டு அட்சயா டிரஸ்ட்டைத் தொடங்கினேன். அட்சயப் பாத்திரத்தை ஏந்திய மணிமேகலையின் நினைவாக இந்தப் பெயரை வைத்தேன். அந்த அட்சயப் பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல் வந்ததுபோலு எனது திட்டமும் நிற்காமல் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பெயரை வைத்தேன்…,” என்றார் கிருஷ்ணன்.
கிருஷ்ணனும், அவரது அறக்கட்டளைக் குழுவினரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகின்றனர். தனது கையால் சமைத்த உணவுப் பொருட்களை பொட்டலமாக போட்டு எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 170 கி.மீ அளவுக்கு சுற்றி வந்து ஏழை, எளிய மக்களை சாப்பிட வைக்கின்றனர்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 பேர் வரை கிருஷ்ணனால் சாப்பிடும் வாய்ப்பைப் பெறுகின்றனராம்.
இத்துடன் நிற்கவில்லை இவர்களது வேலை. சாப்பாடு கொடுக்கிறார். அதை சாப்பிடக் கூட முடியாத நிலையில் (மன வளம் குன்றியவர்கள்) இருந்தால், பக்கத்திலேயே உட்கார்ந்து அவர்களுக்கு சாப்பாட்டை ஊட்டி விடுகின்றனர். குடிக்க தண்ணீரும் கொடுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் இடத்தை விட்டு நகர்கின்றனர்.
அத்தோடு நிற்காமல் அழுக்குப் படிந்த தலைமுடி, காடாக வளர்ந்து கிடக்கும் தாடியுடன் யாராவது இருந்தால் அவர்களை தனது காரில் ஏற்றி தனது இருப்பிடத்திற்கு அழைத்து வருகிறார். அவர்களுக்கு தானே உட்கார்ந்து அழகாக முடி வெட்டி, தாடியை ஒட்ட வழித்தெடுத்து, முகத்தை சீராக்குகிறார் கிருஷ்ணன்.
பிறகு தான் பெற்ற குழந்தைக்குச் செய்வது போல ஒரு ஸ்டூலைப் போட்டு அவர்களை உட்கார வைத்து சோப்பு போட்டு குளிக்க வைத்து அழகுபடுத்தி நல்ல உடையைக் கொடுத்து உடுத்திக் கொள்ள வைக்கிறார். அப்போது தங்களையே புதிதாக பார்த்த மகிழ்ச்சியில் அவர்களது முகத்தில் தெரியும் வெட்கச் சிரிப்பைப் பார்த்து கிருஷ்ணன் அடையும் பூரிப்பு-அதை வார்த்தையால் சொல்ல முடியாது.

இதுவரை கிட்டத்தட்ட 10.2 லட்சம் சாப்பாட்டுப் பொட்டலங்களை இலவசமாக விநியோகித்துள்ளாராம் கிருஷ்ணன்.
கிருஷ்ணன் குழுவினர் அணுகும் ஏழைகளில் பெரும்பாலானோர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான். தனக்காக சாப்பாடு தரும் நாராயணனுக்கு நன்றி சொல்லக் கூடத் தெரியாத அளவுக்கு மனதால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
இது தனக்கு பெரும் மன நிறைவு தருவதாக கூறுகிறார் கிருஷ்ணன். நான் சமைப்பதை விட அதை சாப்பிடும்போது அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதிதான் எனக்கு பெரும் மன நிறைவைத் தருகிறது. அவர்களின் ஆன்மா திருப்தி அடைவதை அவர்களின் முகத்தில் பார்க்கிறேன். எனது மக்களை பட்டினியிலிருந்து காக்க விரும்புகிறேன் என்றார் கண்களில் நீர் துளிர்க்க.
ஹீரோவாக தேர்வு செய்ய…
உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுத்து விருது அளித்து வருகிறது சிஎன்என் தொலைக்காட்சி. இந்த வருடம் சிஎன்என் தேர்ந்தெடுத்த பத்து பேரில் நாராயணன் கிருஷ்ணனும் ஒருவர்.
இவருக்கு விருது கிடைத்தால் விருதுக்குத்தான் பெருமையாக இருக்கும். ஆனால் இந்த விருதின் மூலம் அவர் பணி மேலும் வளர்ந்து விரிவடைந்து பெரிய ஆலமரமாக வாய்ப்புள்ளது. நீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்க அளிக்க இங்கு சென்று வாக்களிக்கலாம். நவம்பர் 18-ம் தேதிக்குள் இந்த வாக்கை செலுத்த வேண்டும்.
http://heroes.cnn.com/vote.aspx
இது நாராயணன் கிருஷ்ணனின் அட்சயா டிரஸ்ட்டின் இணையதளம். நாராயணனின் சேவையில் பங்கெடுக்க விரும்புவோர் இதை அணுகலாம்.
http://www.akshayatrust.org/
இவரைப்பற்றி சிஎன்என் வெளியிட்டுள்ள ஆங்கிலக் கட்டுரை இது: Once a rising star, chef now feeds hungry
கிருஷ்ணனின் தொலைபேசி: +91 (0) 452 4353439 / 2587104 செல்பேசி:+91 98433 19933
இமெயில்: ramdost@sancharnet.in