கதை என்னவென்றால் ஜேடன் ஸ்மித் தன்னுடைய அம்மாவின் வேலை மாறுதல் காரணமாக சீனாவிற்கு அம்மாவுடன் குடி வருகிறான். அங்கே அவனுக்கும் அங்குள்ள சிறுவர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்தப்பிரச்சனையை எப்படி ஜாக்கி சான் துணைகொண்டு சமாளிக்கிறான் என்பதே கதை. 1984 ஆண்டு ஒரு The Karate Kid படம் வந்தது அதனோட ரீமேக் இந்தப்படம் என்று கூறப்படுகிறது.
ஜேடன் ஸ்மித் சண்டை போடும் காட்சிகள் தவிர மற்ற இடங்களில் சிறப்பாக நடித்துள்ளான். சண்டைக் காட்சிகளில் சோபிக்க முடியாமல் போனதற்கு அவனை விட மற்ற சிறுவர்கள் சிறப்பாக சண்டை இட்டது ஒரு காரணமாக இருக்கலாம் அதுவும் குறிப்பாக ஜேடன் ஸ்மித்துடன் தகராறு செய்யும் சிறுவன், அவனது நடிப்பு ரொம்ப அருமை. மிகவும் முரட்டுத்தனமாக அதே சமயம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறான்.



ஜேடன் ஸ்மித் தோழியாக வரும் சிறுமி (பெண்!) நன்றாக நடித்துள்ளார் அவர்களுடனான நட்பு ரசிக்கும்படி உள்ளது. ஆனாலும் எனக்கு பிரச்சனை செய்யும் சிறுவனாக வருபவன் நடிப்பு ரொம்ப கவர்ந்தது. அந்த கோபத்தை எப்படி முகத்தில் பிரதிபலிக்கிறான்! அடேங்கப்பா!! அதே போல கடைசியில் தன் தவறை உணர்ந்து பெரிய மனிதனை போல நடந்து கொள்ளும் காட்சியில் அதுவரை அவன் மீது இருந்த வெறுப்பு வெயில் கண்ட பனியாக மறைந்து விடுகிறது.

ஜேடன் ஸ்மித்திற்கு வயது 12 தான் ஆகிறதாம்.. என்னமா பேசுறான்! என்ன ஒரு அசத்தலான உடல்மொழி! சென்டிமென்ட்டான காட்சியில் கண்ணீர் விடும் காட்சியில் நிஜமாகவே அசத்தி இருக்கிறான். சண்டைக்காட்சியில் இவன் சின்னப்பையன் என்பதாலும் சீனா சிறுவர்கள் சிறு வயது முதலே சண்டைப் பயிற்சி பெறுபவர்கள் என்பதாலும் அவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியமில்லை, அவனளவில் சண்டை காட்சியில் முயற்சி செய்துள்ளான்.
படம் கொஞ்சம் கூட சலிப்பில்லாமல் போகிறது. திரைக்கதை சிறப்பாக உள்ளது. அடுத்தது என்ன காட்சி என்று ஊகிக்க முடிகிறது என்றாலும் வரும் காட்சியை எதிர்பார்த்து நம்மை ஆர்வமாக வைத்து இருப்பது திரைக்கதையின் வெற்றியே! இந்தப்படத்திற்கு தயாரிப்பாளர்களில் ஜேடன் ஸ்மித்தின் தந்தையான வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவியும் அடங்குவர். குறைந்த முதலீடு அதிக லாபம்

இந்தப்படத்தோட தலைப்பை பார்த்தவுடன் ஒரு காமெடி SMS நினைவு வருகிறது. அழகிய தமிழ் மகன் என்று படம் பெயர் வைத்தார்கள் கடைசி வரை அது யார் என்றே காட்டவில்லை என்று நக்கலடித்து வந்து இருந்தது அது மாதிரி The Karate Kid என்று படம் பெயர் வைத்தார்கள் கடைசி வரை குங்க்பூ மட்டுமே பிரதானமாக இருந்தது

உண்மையில் இந்தப்படத்தைப் பற்றி சிறு அளவிலே எழுத நினைத்தேன், படத்தின் நல்ல காட்சிகளை விவரிக்க நினைத்து அது ஒரு விமர்சனம் அளவிற்கு வந்து விட்டது
