பையா வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்து இருக்கும் படம் நான் மகன் அல்ல. வெண்ணிலா கபடிக்குழு என்ற வெற்றிப்படத்திற்கு பிறகு இயக்கி இருக்கும் படம் இயக்குனர் சுசீந்திரனுக்கு. இருவருக்குமே இந்தப்படம் நல்ல பெயரை பெற்றுத்தந்து இருக்கிறது வசூல் ரீதியாகவும் வெற்றி பெரும் என்று பலரால் கூறப்படுகிறது.

கதை ரொம்ப சிக்கலானதெல்லாம் இல்லை.. தன் தந்தையை கொன்றவர்களை (உடன் சில காரணங்களும்) மகன் பழிவாங்குகிறான். இது தான் படத்தின் கதையே. இதில் போதை பொருள்கள், தற்கால ஒரு சில இளைஞர்கள் நடவடிக்கை, சமூக சீர்கேடு போன்றவற்றை சேர்த்து தனது சிறப்பான திரைக்கதையின் மூலம் தொய்வில்லாமல் படத்தை கொண்டு செல்கிறார்.
படத்தின் ஹீரோ என்னை பொறுத்தவரை திரைக்கதை தான் கார்த்தி எல்லாம் அதற்கு அடுத்தது தான். இதைப்போல பல படங்கள் வந்து இருந்தாலும் மறுபடியும் மற்றவர்களுக்கு சலிப்பு தட்டாமல் கொடுத்து வெற்றி பெறுவது என்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான். படத்திற்கு பெரிய குறை அதிகப்படியான வன்முறை. வன்முறை என்று சொல்வதை விட ஒரு சில காட்சிகள். சுசீந்திரன் எதற்காக வெட்டுவதை (வெட்டுவதை அப்பட்டமாக காட்டவில்லை என்றாலும்) இந்த அளவிற்கு காண்பித்தார் என்று புரியவில்லை. சில காட்சிகள் ஹாரர் படத்தை நினைவூட்டுகிறது.
படம் துவங்கும் போதே ஒரு வன்புணர்வு காட்சி போல வரும் ஆனால் அதை முழுதும் காட்டாமல் காட்சியமைப்பின் மூலம் நமக்கு கூறி இருப்பார்கள் அதைப்போல இதையும் செய்து இருக்கலாம். அதிக வன்முறை பெண்களை கவராது குறிப்பாக திருமணமானவர்கள். கல்லூரி படிக்கும் பெண்கள் ஒருவேளை வன்முறை காட்சிகளை விரும்பலாம்..காரணம் இப்பெல்லாம் ஒரு சில பெண்கள்.. பையன் ரவுடி மாதிரி இருக்கணும் தம்மு தண்ணி அடிக்கணும் என்று விரும்புகிறார்கள் இப்படி இருந்தால் ரொம்ப மேன்லியாக இருக்கிறார்கள் என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். அவர்களை போன்றவர்களுக்கு வேண்டும் என்றால் இது ஏற்புடையதாக இருக்கலாம் பெரும்பாலான பெண்களுக்கு இது ஏற்புடையதாக இருக்காது மற்றபடி என்னைப்போல வன்முறை படங்கள் அதிகம் பார்ப்பவருக்கு இது எதுவுமில்லை.
கார்த்திக்கு இந்த கதாப்பாத்திரம் கச்சிதமாக பொருந்துகிறது. மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு எதுவும் செய்யாமல் தன் கதாப்பாத்திரத்தின் தன்மை அறிந்து அல்லது இயக்குனரால் ஒழுங்காக வேலை வாங்கப்பட்டு நடித்திருக்கிறார். காமெடி காட்சிகள் இவருக்கு நன்றாக பொருந்துகிறது. போறபோக்குல அப்படியே ஒரு சிரிப்பு வெடியை போட்டுட்டு போயிட்டே இருக்காரு. அதுவும் இவர் பணம் வசூல் பண்ண ஒரு வீட்டிற்கு சென்று அங்கே கிரிக்கெட் பார்த்து இவர் செய்யும் அலப்பறை செம காமெடி. இது மாதிரி பல இருக்கு. சண்டைக் காட்சிகளில் நிறைய மதிப்பெண் பெறுகிறார் அதற்கு இவரின் நம்பும்படியான உடல்வாகும் ஒரு காரணம்.
கார்த்தியின் அப்பாவிற்கு அடிபட்டு படுத்து இருப்பார் அதனால் குடும்ப வேலைகளையெல்லாம் கார்த்தி கவனிக்க வேண்டியதாக இருக்கும். ரேசன் மின்சார மற்றும் மளிகை கட்டணம் என்று நீளும் அது வரை ஜாலியாக சுற்றிக்கொண்டு இருந்தவர் இதை எல்லாம் பார்த்து குடும்பஸ்தன் என்றால் இத்தனை வேலை, பொறுப்பு இருக்கா! என்று அவர் மிரளுவதற்க்கு திரையரங்கில் பலத்த சிரிப்பலை.



படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் யுவன் சிறப்பாக செய்துள்ளார் குறிப்பாக பின்னணி இசை அருமை. கொஞ்சம் பரபரப்பான காட்சிகளில் டெம்ப்போ ஏற்ற பின்னணி இசை பெரிதும் உதவியுள்ளது.
முக்கால்வாசி படம் இயல்பாகவும் கடைசி கால் வாசி படம் சினிமாத்தனமாகவும் இருக்கிறது. கால்வாசி படம் சினிமாத்தனம் என்று நமக்கு தோன்றக்காரணமே அதற்கு முந்தைய காட்சிகள் இயல்பாக வந்து இருந்தது தான். அதுவும் அப்படியே இருந்து இருந்தால் நமக்கு பெரிய வித்யாசம் தோன்றாது. ஆனாலும் ரொம்ப வழக்கமான காட்சிகளாக காட்டாமல் பரபரப்புடன் நம்மை வைத்து இருப்பது இயக்குனரின் வெற்றி தான்.

இந்தப்படம் வெற்றிப்படம் என்று கூறுகிறார்கள் ஆனால் எந்த ஒரு படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வருகிறார்களோ அந்தப்படமே வெற்றிப்படமாக அறிவிக்கப்படும். இந்தப்படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் இருக்கலாம் ஆனால் குறைவாகத்தான் இருக்கும் அதுவும் பெண்கள் வாய்ப்பே இல்லை. எனவே வெற்றி பெறலாம் ஆனால் பெரிய வெற்றியை அடைய முடியுமா என்று தெரியவில்லை.
கார்த்திக்கிற்கும் ஒரு பெரிய ரவுடிக்கும் திடீர் நட்பை ஏற்படுத்தி அதை கடைசி வரை கொண்டு சென்று இருப்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் சுவாராசியமாக இருந்தது. ரவுடிகள் உலகம் எப்படி இருக்கும் என்று அதன் இயல்பு கெடாமல் எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக வழக்கமாக இவர்கள் சந்திக்கும் இடம், இருக்கும் இடத்தின் அமைப்பு என்று அனைத்திலும் கவனம் செலுத்தி செட்டிங்க்ஸ் எதுவும் போடாமல் அப்படியே எடுத்து இருப்பது காட்சிகளின் மீதான நம்பகத்தன்மையை நமக்கு தருகிறது. அதிலும் ஒரு மாணவனின் மாமாவாக வருபவரின் குரலும் உடல் மொழியும் அவர்கள் போடும் திட்டமும் அசத்தலாக உள்ளது. எந்த வித ஒப்பனையும் இல்லாமல் இருப்பது காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

அதே போல கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் பொறுக்கித்தனமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று பலருக்குத்தெரியும். இதைப்போல செயல்களில் ஈடுபடாத மாணவர்கள் இதைப்பார்த்து மனம் வெதும்பி எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருக்கிறார்கள். ஒழுங்கான கல்லூரி மாணவர்களை கேட்டால் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் சிலர் (அனைவரும் அல்ல) செய்யும் வேலைகளை!! கதை கதையாக கூறுவார்கள். பலரும் நினைப்பது போல மாணவர்கள் படிக்க மட்டுமே செய்வார்கள் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. சமீபத்தில் கூட ஒரு பையனை பணத்திற்காக மாணவர்கள் அடித்து கொன்றார்கள். எனவே வன்முறை என்ற குறுகிய வட்டத்திற்குள் படத்தில் வரும் காட்சிகளை அடக்கி விமர்சிப்பதை விட அதில் அவர்கள் கூற வரும் விஷயம் என்ன என்பதை புரிந்து கொள்வதே நமக்கு நல்லது. நாம் நினைக்கும் படி உலகம் அழகானது அல்ல.. அழகானது தான் நமக்கு இதைப்போல ஏதாவது நடக்காத வரை.
நான் மகான் அல்ல பெயர்க்காராணம் என்ன?
குற்றம் புரிந்தவர்களை சட்டப்படி தண்டிக்காமல் (பலர் அதில் இருந்து தப்பி வெளியே வந்து விடுவதால்) பாதிக்கப்பட்ட ஒருவன் தானே தண்டிக்க நினைப்பதால் அவன் மகான் அல்ல. இது தாங்க எனக்கு புரிந்த பெயர்க்காரணம்.
கொசுறு
சிங்கப்பூரில் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படம் தான் முதலில் வரும் அறிமுக நடிகர்கள் புது இயக்குனர்கள் குறைந்த பட்ஜெட் படங்கள் இங்கே வெளியாகாது. தமிழகத்தில் இதைப்போல படங்கள் வெற்றி பெற்ற பிறகே இங்கே வெளியிடுவார்கள். ஒரு சில படங்கள் வராமலே போய்விடும். ரேணிகுண்டா படமெல்லாம் நீண்ட நாட்களுக்கு பிறகே இங்கே வெளிவந்தது. அதே போல களவாணி படமும் தாமதமாகத்தான் வந்தது.


படத்தில் விமல் தூள் கிளப்பியுள்ளார்.. அதுவும் ஒரு காட்சியில் ஓவியாவை வண்டியில் உட்கார வைத்து ஓட்டலாம் என்று அருகில் வந்ததும் அவர் இன்னொரு சிறுவனை உட்காரக்கூறி சொல்லவும்.. அதற்க்கு விமல் கடுப்பாகி இதற்குத்தான் வந்தோமா! என்பதை முனகிக்கொண்டே சொல்வதை இன்னும் என் நண்பர்களுடன் பேசும்போது சொல்லிச்சொல்லி சிரித்துக்கொண்டு இருக்கிறேன். இது மாதிரி படம் முழுக்க சிரிப்பு அணு குண்டுகள்.
கஞ்சா கருப்பை இவர்கள் ஒரு வழி பண்ணுவதும் அதை அவர் கடைசி வர சமாளிக்க படாதபாடு படுவதையும் பார்த்தால் உம்மனாமூஞ்சி கூட சிரித்து விடுவான். திருவிழாவில் இவர் மனைவியுடன் சந்தோசமாக சிரித்து பேசிக்கொண்டு இருக்க இதை பார்த்த விமல் நண்பர்கள்.. இருடி சந்தோசமா இருக்கியா! என்று அதற்கு(ம்) வேட்டு வைக்கும் காட்சி நமக்கு வெடிச்சிரிப்பை வரவழைக்கிறது. ஆனா அது செம ஐடியா! நான் கூட வேற எதோ பண்ணப்போகிறார்கள் என்றது பார்த்தால் சுளுவா அவருக்கு பேதி கிளப்பி விடுவார்கள் ஹா ஹா ஹா
நீங்கள் இது வரை படம் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாகப் பாருங்கள் தனியாக அல்ல நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் அப்போது தான் ரொம்ப என்ஜாய் செய்து பார்க்க முடியும். நான் நேரமிருந்தால் இன்னொருமுறை செல்லலாம் என்று இருக்கிறேன்… நண்பர்களும் மறுபடியும் போகலாம் என்று அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.