எந்திரன் படம் நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக வெற்றி பெற்று இருக்கிறது. இதில் ரஜினி ரசிகனாக சந்தோசமாக இருந்தாலும் ஒரு தமிழனாக அதை விட அதிக சந்தோசம் அது பற்றிய பதிவே இது.
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்! என்று அனைவரும் கூறினாலும் அது மற்ற நாட்டுடன் போட்டி என்று வரும்போது மட்டுமே என்னைப்போன்றவர்களுக்கு செல்லுபடியாகிறது. அதே மாநிலம், மாவட்டம், நகரம் அதில் கிராமம், வார்டு என்று சென்று சென்று கடைசிவரை நம் அணி என்று வரும் போது அதற்கு ஆதரவு கொடுக்கும் சராசரி குடிமகன் நான். எதுக்குப்பா! போட்டி எல்லாம்.. நம்மவர்கள் தானே! இதில் வெற்றி பெற்றால் என்ன தோற்றால் என்ன! என்று நினைக்கும் அளவிற்கு நான் ரொம்ப நல்லவன் கிடையாது. அப்படிப்பட்ட நல்லவர்களாக நீங்கள் இருந்தால் இதோட நிறுத்திட்டு வேற ஏதாவது படிக்கப்போகலாம்.
எனக்கு பொதுவா வட இந்தியர்களை சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது (வழக்கம்போல ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் அது மிகக்குறைவு) காரணம் அவர்களுக்கு தென் இந்தியர்கள் என்றாலே ஒரு இளக்காரமான எண்ணம் தான். நம்மை மதிக்கவே யோசிப்பார்கள் கேலியும் கிண்டலுமாகத் தான் பேசுவார்கள். நான் பணி செய்த இடங்களில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன். இது பற்றி விரிவாக இன்னொரு பதிவில் கூறுகிறேன். அதனாலே எப்போதெல்லாம் நாம் அவர்களை விட உயர்ந்து நிற்கிறோமோ அந்த சமயங்களில் எல்லாம் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.

ரஜினி கமல் படம் நன்றாக ஓடுகிறது என்றாலும் ஹிந்திப் படங்களுடன் ஒப்பிடும் போது வரவேற்புக் குறைவு தான் காரணம் இந்தியாவில் தமிழ் பேசுபவர்கள் குறைவு ஆனால் ஹிந்தியின் வீச்சு அதிகம். எனவே ரஜினி கமல் படங்கள் இந்தியாவில் வெளியானால் அது தமிழ்நாட்டில் மட்டும் ஓட முடியும் அதிகபட்சமாக தென் மாநிலங்கள் ஆனால் ஹிந்திப் படங்களுக்கு அப்படி இல்லை இந்தியா முழுவதும் வரவேற்பு உள்ளது. அதுவுமில்லாமல் வெளிநாடுகளிலும் ஹிந்திப்படங்கள் தான் இந்தியப்படங்கள் என்றாகி விட்டது. இதை விடக் கொடுமையாக இவர்கள் வருடாவருடம் துபாயில் நடத்தும் இந்தி(ய)த் திரைப்பட விழா. இந்தியத் திரைப்பட விழா என்று கூறி விட்டு தென் மாநில படங்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிப்பார்கள்.
ஹிந்தியில் நல்ல படங்கள் வருகிறது இல்லை என்று கூறவில்லை அதற்கு சற்றும் சளைக்காமல் தென் இந்தியாவிலும் நல்லப் படங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. இங்கே அவர்கள் கிண்டலடிக்கும் படி படங்கள் வந்தாலும் அதையும் மீறி பல நல்லப் படங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. இவர்கள் என்னவோ ஒழுங்கு போல பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களிலும் பல குப்பை படங்களை தயாரித்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் படத்தை பார்த்தால் வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக நினைத்துக்கொள்வார்கள் அந்த அளவிற்கு இவர்களது படங்கள் இருக்கும். இந்தியப்படங்கள் என்று கூறி விட்டு படம் முழுவதையும் வெளிநாட்டில் எடுத்து இருப்பார்கள். இதற்கு வெளிநாட்டில் சென்று விருது வேறு அதுவும் நமது படங்களை புறக்கணித்து. இதை ஒருமுறை விருந்தினராக சென்ற மம்முட்டி அவர்களை நாக்க புடுங்கற மாதிரி நறுக்குன்னு கேட்டார்.
இப்ப எல்லாவற்றிக்கும் சேர்த்து வைத்து அவர்கள் வாயை நவதால் பூட்டு போட்டு பூட்டி இருக்கிறது நமது தமிழகத்தின் எந்திரன். ஓவராக பேசியவர்கள் எல்லாம் வாயை இறுகக்கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். கான்களுக்கு எல்லாம் புகைந்து கொண்டு இருக்கிறது. தென் இந்தியாவை கிண்டலடிக்கும் வட இந்திய ஊடகங்கள் போட்டிபோட்டுக்கொண்டு எந்திரனைப் பற்றி செய்திகளாகவும் டாக்குமென்ட்டரியாகவும் போட்டுத் தாக்கிக்கொண்டுள்ளன. இந்தியாவின் அதிகபட்ச வசூலை எடுத்த 3 இடியட்ஸ் மற்றும் டபாங் படங்களை அசால்ட்டாக பின் தள்ளியிருக்கிறது ஒரு மாநில மொழிப் படமான எந்திரன்.
இதுவரை இந்தியப்படம் என்றால் அது பாலிவுட் படம் தான் என்று நினைத்துக்கொண்டு இருந்த பல வெளிநாட்டுக்காரர்கள் தமிழ்ப்படம் என்று ஒரு மாநில மொழிப் படமும் உள்ளது என்று தெரிந்துகொண்டுள்ளார்கள். பல நாடுகளில் எந்திரன் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் வெளி வந்துள்ளன. இது பற்றி கூற வேண்டும் என்றாலே ஒரு தனி இடுகை எழுத வேண்டும்.

வட இந்திய ஊடகங்கள் ரஜினியை தாறுமாறாக உயர்த்தி பேசுவதற்கு ஒரு முக்கிய காரணம் ரஜினியின் அடக்கம் மற்றும் அலப்பறை இல்லாத நடவடிக்கையாகும். வட இந்திய பெரிய திரை நாயகர்கள் ஊடகங்களிடம் பந்தாவுடனே நடந்து கொள்வார்கள். செய்தியாளர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டவர்கள் பலர் ஆனால் ரஜினியின் எளிமை வெளிப்படையான பேச்சு என்று பல விஷயங்கள் அவர்களுக்கு பாலிவுட் நடிகர்களை ஒப்பிடும் போது இவர்களுக்கு ஆச்சர்யமாகவே இருந்தது அதனுடன் படமும் மாபெரும் வெற்றி பெற்றதால் பாலிவுட்டே வயிறு எரியும் அளவிற்கு ஊடகங்கள் புகழ்ந்து விட்டார்கள். ரஜினியை கிண்டலடித்துக்கொண்டு இருந்த பலர் கூட எந்திரனுக்குப்பிறகு ரஜினியின் ரசிகர் ஆகி விட்டார்கள்.
இதைப்போல தமிழனின் பெருமையை தரணியெங்கும் உயர்த்திய எந்திரன் மேலும் பல வெற்றி பாராட்டுகள் பெற வாழ்த்துகிறேன். என்னதான் ரஜினி என்ற காந்தம் இருந்தாலும் எந்திரன் படம் மாபெரும் வெற்றி பெற சன் டிவி யும் ஷங்கரும் ஒரு முக்கிய காரணமாகும். சன் டிவி இல்லை என்றாலும் எந்திரன் வெற்றி பெற்று இருக்கும் என்றாலும் இந்த அளவிற்கு பெரிய வெற்றி அடைய சன் டிவி யும் ஒரு காரணமாகும். படத்திற்கு தமிழகம் தவிர்த்து மற்ற இடங்களிலும் சிறப்பாக மார்க்கெட்டிங் செய்தார்கள். ரஜினியின் புகழ் பெருமளவில் சென்றடைய இவர்களும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இதற்காக ஒரு ரஜினி ரசிகனாக சன் டிவி க்கு நன்றி தெரிவிக்கிறேன் (இவர்கள் மீது பல கோபங்கள் இருந்தாலும்)
எந்திரனை கிண்டலடிக்கும் நண்பர்களே! நீங்கள் கிண்டலடித்த, திட்டித்தீர்த்த படம் தமிழனின் பெருமையை பல நாடுகளில் பறை சாற்றியிருக்கிறது என்பதை உங்களுக்கு பிடிக்கின்றதோ இல்லையோ! நீங்கள் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ரஜினி, சன் டிவி எதிர்ப்பு என்ற அளவில் யோசிக்காமல் ஒரு தமிழ்ப்படம் என்ற அளவில் பாருங்கள் பெருமையை உணர்வீர்கள். அதையும் மீறி ரஜினியை திட்டிக்கொண்டு இருப்பவர்கள் பின் வரும் ஜென் கதையை படியுங்கள். ரஜினி ஏன் பலர் ஏசும் போது அமைதியாக இருக்கிறார் என்று புரியும்.